சித்திரை திருவிழா
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கருதப்படுகிறது. சிவபிரான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களுள், முதலாவது இந்திரன்சாபம் தீர்த்த படலம். ஒருமுறை விருத்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் கெடுதல் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான்.
இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் சிறப்பாகக் கருதப்படுகிறது.
பாண்டிய மன்னனுக்கு அம்பிகை மகளாகப் பிறந்து நல்லாட்சி செய்த ஊர் மதுரை. சிவன் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய இடம். சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியுள்ள அதி அற்புதமான திருத்தலம்.தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் கூறப்படும் சுலோகம் உருவாகக் காரணமாக இருந்த தலம்.
இந்திரன், வருண பகவான் வழிபட்ட தலம். இத்தலம் சிவஸ்தலம் என்றாலும் 64 சக்தி பீடங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நவக்ரஹத் தலங்களுள் புதன் ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயில் 14 கோபுரங்களுடனும், 5 வாயிலுடனும் அமைந்துள்ளது. கலையழகு, சிலையழகு, சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் மிக உயரமானது.
பாற்கடலைக் கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை, சிவன் அமிர்தமாகிய மதுவை தெளித்து நீக்கி புனிதமாக்கியதால் மதுரை என்ற பெயரும், சிவனுக்கு அணிகலனாயிருந்த பாம்பு வட்டமாய்ச் சுற்றி வாலை வாயால் கவ்வி மதுரையின் எல்லையைச் சுட்டிக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயரும், கடம்ப மரங்கள் நிறைந்து காணப் பட்டதால் கடம்பவனம்என்ற பெயரும், மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் விதமாக பெருமான் தன் சடையிலிருந்து அனுப்பிய நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி இருந்து காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் ஏற்பட்டது.
Related Articles...