சித்திரை திருவிழா
அழகர் ஆற்றில் இறங்குதல்:
மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமானது இந்தத் தீர்த்தமே. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, “மண்டூக பவ’ அதாவது “மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ’ என சாபமிட்டார்.
சாபம் பெற்ற சுதபஸ், “துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்கவில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்,” என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.
Related Articles...