தீபங்கள் ஏற்றும் திருகார்த்திகை

கார்த்திகைத் தீபத் திருநாள் பண்டைக் காலந்தொட்டு நம் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமது தொல்காப்பிய உரையில், நச்சினார்க்கினியர், ‘கார்த்திகை திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு’ என்று கார்த்திகைத் தீபத்தைக் குறிப்பிடுகிறார். ‘கார் நாற்பது’ என்ற நூலிலும் கார்த்திகை தீபம் பற்றிய விரிவான விளக்கம் கிடைக்கிறது. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ‘தையலார் கொண்டாடும் விளக்கீடு’ என்று கார்த்திகை விளக்கு பற்றி பாடி மகிழ்கிறார்.

karthikai deepam 8

இந்தத் திருநாள் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை கூறப்படுகிறது.

கைலாயத்தில் ஈசன் ஏகாந்த தவத்தில் ஆழ்ந்திருந்த போது உமை, ஈசனின் பின்புறமாய் வந்து நின்று விளையாட்டாய் அவர் இரு கண்களைப் பொத்தினாள்.அதனால் உலகம் இருண்டது. ஈசனின் வல, இடக் கண்களான சந்திர, சூரியர்கள் களையிழந்தனர். நெற்றிக் கண்ணாகிய அக்னியும் அன்னையின் கைவிரல் பட்டுக் குளிர்ந்து போனது. அதனால் வேள்விகள் தடைப்பட்டன. யாகங்களும், பூஜைகளும் இல்லாமல் போயின. உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கினர். அதனால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது.

இதனால் சினம் கொண்டார் ஈசன். உமை விளையாட்டாய் இந்தச் செயலைச் செய்திருந்தாலும் அது மிகப் பெரிய தவறு என்பதால், அன்னையைச் சபித்தார்.

அன்னை அஞ்சி நடுங்கி பிழை பொறுக்குமாறு வேண்ட, “ தேவி, நீ விளையாட்டாகச் செய்தாலும் தவறு, தவறு தான். ஆதலால் நீ பூவுலகம் சென்று தவம் மேற்கொள்வாயாக! தக்க காலத்தில் யாம் வந்து உம்மை ஆட்கொள்வோம்” என்று கட்டளையிட்டார்.

அன்னையும் அவ்வாறே ஈசனின் கட்டளைப்படி பூவுலகிற்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். அவ்வாறு அன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று, சாப நிவர்த்தியான தலம் தான் அண்ணாமலை. சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது, “எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.