பொங்கல் திருநாள்

போகிப் பண்டிகை:

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

pongal festival 2

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் ‘போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த வருடத்திற்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.

இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழா’ வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனைப் பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை ‘போகி’ யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம்பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

ஆனால் இப்போதெல்லாம் போகியன்று டயர்களைக் கொளுத்தும் மூடத்தனம் பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள்.

எனவே நாம் சமுதாயக் கட்டுப்பாட்டோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.