பொங்கல் திருநாள்
பொங்கல் பண்டிகை:
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார்.
இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில் கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் பால்கனியிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. எது எப்படியோ… பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
Related Articles...