பொங்கல் திருநாள்
மாட்டுப் பொங்கல்:
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்கு வெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது.
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. ‘ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. ‘ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே. இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன. மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, வீர நடை நடக்க வைப்பர்.
பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு அங்க வஸ்திரம் போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே. ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார். திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை. ‘உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை’ என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர்.
நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான வள்ளுவ பூஜையாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Related Articles...