பொங்கல் திருநாள்

காணும் பொங்கல்:

பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது கனுப் பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள். காணும் பொங்கலும் இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது.

pongal festival 3

இன்றைய ‘சீரியல்’ உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்! வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், சூரியனை கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்!

பிரார்த்தனை:

நம் நாடு ஒரு விவசாய நாடு ஆகும். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான். அவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் எல்லோரும் சோற்றில் கை வைக்க முடியும். எனவே, அவர்கள் வாழ்வு சிறக்க, நாமும் இந்த நன்னாளில், நல்ல நீர்வளம் பெறவும், அண்டை மாநிலங்களுடன் ஒரு நல்ல உறவு அமைந்து, தண்ணீர் பற்றாக்குறை இல்லது இருக்கவும், வேளாண் தொழில் சிறந்து விளங்கவும் இறைவனை ஒன்றாகப் பிரார்த்திப்போம்.

வாழ்க வையகம்…! வாழ்க வளமுடன்…!!