மாசி மகத்தின் மகத்துவம்

திருக்கோவில்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழபகவான் மகநட்சத்திரத்துடன் கூடி கும்பராசிக்குச் செல்லும் புண்ணிய காலத்தில் “மகாமகம்” என்னும் பெருவிழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினைக் காணவேண்டி இந்தியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் கும்பகோணம் வருவது வழக்கம். இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்குமென்பது ஐதீகம்.

masi magam 3

இந்த மாசி மகத்தில் கடல் நீராட்டு அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில்,

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்”

என்றுக் குறிப்பிட்டுப் பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினார் என்பது வரலாறு.

மாசி மாதத்தை கும்ப மாதம் என்று சிறப்பித்து கூறுவர். கும்பத்து மாதம் வெகு சம்பத்து தரும் என்பது ஜோதிட வாக்கு. கேது பகவான் ஞானத்தை தரக்கூடியவர். ஆகையால் இந்நாளில் கல்வி சம்பந்தமான பணிகள், பயிற்சிகள், பாடங்கள் படிப்பது, கல்வி பயில சேருவது, மந்திர உபதேசம் பெறுவது மிகவும் சிறப்பாகும். முன்னோர்கள், தாய், தந்தையரை நினைத்து அன்னதானம், ஆடை தானம் செய்யலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் நிலவும். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு சூறை தேங்காய் உடைத்து வழிபட தடைகள் விலகும்.