மாசி மகத்தின் மகத்துவம்

ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, அவர் கடலில் கட்டிப் போடப்பட்டிருந்தார். வருண பகவானது செயல்பாடுகள் இன்றி அனைவரும் துன்புற்ற னர். வருண பகவானை விடுவிக்கும்படி தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவரும் வருண பகவானை விடுவித்தார். அன்றைய தினம் மாசி மக நாள். தோஷம் நீங்கப் பெற்ற வருணன் சிவபெருமானை நோக்கி, ‘மாசி மக நன்னாளில் தீர்த்தம் ஆடி வழிபடுகிறவர்கள் தங்கள் பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலனைப் பெற அருள வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். சிவபெருமான் அவ்வாறே வரமருளினார்.

masi magam cover

கும்பம் என்றால் மாசி மாதம். மாசி மகத்தில் வரும் நீராடலுக்கு கும்பமேளா என்று பெயர். வளத்திற்கும் நீருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புஷ்டி புஷ்யம் என்ற வார்த்தைகள் வளத்தை குறிக்கின்றன. தமிழகத்தில் தைப்பூச புனித நீராடல் சங்ககாலம் துவங்கி, இந்நாள் வரை கொண்டாடப்படுகிறது. முற்காலத்தில், வருணனுக்குரிய வழிபாடாக இருந்த புனித நீராடல், தற்போது, வேறு பரிமாணங்களில் தொடர்கிறது என்றே இதை கருத வேண்டியுள்ளது.

கி.பி. 7ம் நூற்றாண்டில், இந்தியாவுக்கு வந்த சீன யாத்ரீகர் யுவான் சுவாங், பிரயாகையில் நடந்த கும்பமேளாவில் கலந்து கொண்டார். அந்த கும்பமேளா, 75 நாட்கள் நடந்தது. அவரது குறிப்பு தான் வரலாற்றில் கும்பமேளா பற்றிய முதல் குறிப்பாக கருதப்படுகிறது.

மற்ற மூன்று இடங்களில் நடக்கும் கும்பமேளாவை விட, பிரயாகை கும்பமேளாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இங்கு தான் கங்கை, யமுனை ஆறுகளோடு, கண்ணுக்கு தெரியாத அந்தர்வாகினியான சரஸ்வதி ஆறும் ஒன்று சேர்வதாக நம்பப்படுகிறது.

சூரியன், சந்திரன் மகர ராசியிலும், குரு மேஷ ராசியிலும் பிரவேசிக்கும் போது, பிரயாகையில் கும்பமேளா நடக்கிறது. நிரஞ்சன தீர்த்தம், கபில தீர்த்தம், பரசுராம தீர்த்தம், ஆதித்ய தீர்த்தம் உள்ளிட்ட பல தீர்த்தங்கள் இருப்பதால் பிரயாகை “தீர்த்தங்களின் அரசன்’ என வழங்கப்படுகிறது .

மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.